Sunday, March 14, 2010

நோன்பு

நோன்பு
*நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.
*(இவ்விதி) எண்ணப்படும் (குறிப்பிட்ட) சிலநாள்களிலே ஆகும். (அந்நாள் களில்) உங்களில் எவரேனும் நோயாளிகளாகவோ, அல்லது பயணத் திலோ இருந்தால், அவர் வேறு நாள்களைக் கணக்கிட்டு (நோன்பு நோற்று)க் கொள்ளவும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச்சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்.
*நோன்பும் அதன் பலன்களும்
அல்லாஹ்விற்காக என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது ஆகிய சுகங்களைத் துறப்பதற்கே நோன்பு எனப்படும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் “ரமளான்” மாதம் முழுவதும் நோன்பு இருப்பது பருவமடைந்த ஆண் –பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இந்த நோன்பினால் உடல் மட்டுமன்றி உள்ளமும் தூய்மை அடைகிறது. நோயாளிகளிடம் உணவைக் குறைத்துக் கொள்ளுமாறும், பத்தியம் இருக்குமாறும் மருத்துவர்கள் கூறுவர். ஆண்டில் பதினொரு மாதங்கள் ஓயாது உழைக்கும் குடலுக்கு ஒரு மாதம் சற்று ஓய்வு தருவதால் குடல் சுத்தமாகி நோய்கள் அகலவும், உடல் ஆரோக்கியம் பெறவும் வழிபிறக்கிறது. ஆண்டு முழுவதும் உடலில் தேங்கும் அசுத்தத்தை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துகிறது நோன்பு.
நோன்புக் காலங்களில் பசி, தாகம், காமம் ஆகிய உணர்வுகளை சகித்துப் பழகுவதன் மூலம், இதர நாள்களிலும் தீமைகளை விட்டகன்று, தூய்மை அடைய நோன்பு ஒரு பயிற்சிக்களமாக விளங்கு கிறது. வாழ்க்கையில் ஒரு நாளும் பசியை உணர்ந்திராதவர்கள் கூட, பசிக்கொடுமையை அனுபவ ரீதியாக உணரவும், ஏழை எளியோர் மீது இரங்கவும் நோன்பு வழிவகுக்க்கிறது.
இதற்கெல்லாம் மேலாக உண்ணஉணவிருந்தும், பருகப்பானமிருந்தும் அனுபவிக்க அருகில் மனைவி இருந்தும் அல்லாஹ்வின் கட்டளைக் காக அவற்றையெல்லாம் துறக்கும் பொழுது, மனிதனின் பக்தியும், இறையச்சமும் மேலோங்க இந்த நோன்பு காரணமாகிறது.
இவ்விதம் உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகளின் மூலம் மனிதன் தூய நிலையை அடைய இந்த நோன்பு காரணமாகிறது. எனவேதான் “நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. என்று இறைவன் இங்கே சுட்டிக்காட்டுகின்றான்.
அதே நேரத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பொய்,புறம்,கோள் மற்றும் தீய பேச்சுகளிலும், தீய செயல்களிலும் ஈடுபடுவோரின் நோன்புக்கு இறைவனிடம் மதிப்பு இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள் ‘வீண் பேச்சுகளையும், வீணான செயல் களையும் கைவிடாத ஒருவர், தன் உணவையும் பானத்தையும் கை விடுவதில் அல்லாஹ்விற்கு எத்தேவையும் இல்லை.
இன்றும் பழைய மதத்தார் இடையே நோன்பு நோற்கும் வழக்கம் காணப்படுகிறது. எனினும் அது இஸ்லாமிய நோன்பு போன்று மிகுந்த பயன் தரும் முறையில் அமையவில்லை. துக்கம் அனுஷ்டிக்கவும், போரில் வாகை சூடவும், சோதனையிலிருந்து மீளவும் வேண்டி துறவிகள் மேற்கொள்ளும் ஒரு சடங்காக யூதர்கள் நோன்பைச் சுருக்கிக் கொண்டு விட்டார்கள்.
*நோன்பு நோற்கச் சக்தியற்றோருக்கு பரிகாரம் –ஃபித்யா
நோன்பு நோற்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக 1600 கிராம் கோதுமை, அல்லது அரிசி, அல்லது கோதுமையின் கிரயத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விடவேண்டும். அல்லது ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஓர் ஏழைக்கு இருவேளை நடுத் தரமான உணவு அளித்திட வேண்டும். இது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி ஒரு நோன்புக்கு 2150 கிராம் வீதம் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் கோதுமை அல்லது அரிசி வழங்க வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தபட்ச அளவைக் குறிப்பதாகும். விரும்பு வோர் இந்த அளவைவிட அதிகமாக வழங்கலாம். மேலும் ஓர் ஏழைக்கு மட்டுமன்றி பல ஏழைகளுக்கும் அளிக்கலாம். நடுத்தரமான உணவை விடுத்து, உயர் தரமான உணவையும் வழங்கலாம். இவ்விதம் கூடுதலாக கொடுப்பது சிறந்ததாகும் என அல்லாஹ் கூறுகின்றான்.
நோன்பு நோற்க சக்தியற்றோர் இவ்வாறு ஃபித்யா – பரிகார தர்மம் செய்யலாம். என்றாலும் கூட, சிரமத்தைச் சகித்துக் கொண்டு நோன்பு நோற்று விடுவதே மேலான செயலாகும் என நோன்பின் மாண்பை இறைவன் அரிவிக்கிறான்.
*’இஃதிகாஃப்’ தொடர்பான சட்டம்
இஃதிகாஃப் என்பதற்குப் பொதுவாக தங்கியிருத்தல் என்பதே பொருளாகும். ஆயினும் இஸ்லாமிய வழக்கில் குறிப்பிட்ட சில வரை முறைகளுடன் மஸ்ஜிதுகளில் – இறையில்லங்களில் தங்கி வழிபாடு கள் செய்வதற்கே இஃதிகாஃப் எனப்படும்.
ரமளான் மாதம் கடைசிப்பத்து நாள்களில் நோன்புநோற்று மஸ்ஜிதில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு திறந்த பின் உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது முதலியவை மற்றவர் களுக்குக் கூடும். ஆனால் இஃதிகாஃபில் இருப்பவர் நோன்பு திறந்த பின்னர் உண்ணவும் பருகவும் செய்யலாம்; உடலுறவு கொள்ளக் கூடாது என்ற வரைமுறை உண்டு.
இதேபோல இயற்கைக் கடன்கள் மற்றும் மார்க்கத் தேவைகளுக்காக வேண்டியே தவிர, அவர் மஸ்ஜிதிலிருந்து வெளியேறக்கூடாது. இவ்வாறு ஆண்டில் ஒருமுறை மஸ்ஜிதில் தங்கியிருந்து இறைவழி பாட்டில் ஈடுபடுவதால் மனிதனுக்கு மன அமைதியும், மனத்தூய்மை யும் கிடைக்கும். இறைநெருக்கத்தைப் பெறவும் வழியேற்படும். தனக்கும், தன் குடும்பத்தார், சமூகத்தார், தேசத்தார் ஆகியோருக்கும் இறைவனிடம் சிறப்பாகப் பிரார்த்திப்பதற்கு மனிதன் இதன் மூலம் அரியதோர் வாய்ப்பைப் பெறுகிறான்.
அவன், தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றான். (அப்படி) ஞானம் கொடுக்கப்பெற்றவர் அபரிமிதமான நன்மை கொடுக்கப் பெற்றவராவார். (ஆனால்) அறிவாளிகள் தவிர (வேறு எவரும்) இதனை உணர்வதில்லை.
(நீங்கள் தர்மம் செய்ய விழையும் போது) ஷைத்தான் வறுமை குறித்து உங்களை அச்சுறுத்தி (கருமித்தனம் போன்ற) தீமைகளைக் கொண்டு உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும், உதவியையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். .அல்லாஹ் தாராளமானவனும் அறிவோனுமாவான்.
*வறுமையைக் காட்டி மிரட்டும் ஷைத்தான்:
தர்மம் செய்யத் தொடங்கினால் “நாம் தர்மம் செய்து ஏழையாகி விடுவோமோ” என்று மனிதன் எண்ணுவதுண்டு. இது ஷைத்தான் தூண்டுகிற எண்ணம் என இறைவன் எச்சரிக்கின்றான். இறைவழியில் செலவு செய்து கொண்டே போனால், இறுதியில் வறிய நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று அச்சுறுத்தும் ஷைத்தான், கருமித்தனம் மற்றும் பேராசை போன்ற தீய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறே தூண்டி விடுவான். ஆனால் அல்லாஹ்வோ “நீங்கள் அறம் செய்யுங்கள்; உங்களின் பிழைகளைப் பொறுக்கின்றேன். மேலும் உங்களுடைய தொழிலில் முன்னேற்றத்தை அருள்வேன்” என வாக்களிக்கின்றான் எனவும் திருமறை சுட்டுக் காட்டுகிறது.

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – செப்டம்பர் 2008

No comments: