Thursday, December 31, 2009

கல்வி கரையில் !

கல்வி கரையில் !


திருச்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது சொந்த ஊரான கீரனூர் அருகேயிருந்து நாற்பதாண்டுகளுக்கு முன்னர் குடியேறினார் அஹ்மத் என்ற அப்பெரியவர்.

உடன் தனது மனைவி மற்றும் ஒரே மகன் அன்சாரியையும் அழைத்துச் சென்றார்.தொழில் துறையில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததன் காரணமாக எட்டாம் வகுப்புடன் தனது மகன் படிப்புக்கு முழுக்கு போட்டார். தனக்கு உதவியாக தனது மகனை வைத்துக் கொண்டார்.

அல்லாஹ்வின் பேருதவியாலும் தனக்கிருந்த அனுபவத்தின் மூலமாகவும், அயராத உழைப்பின் மூலமாகவும் கடும் போட்டிகளுக்கிடையே திருச்சி மாநகரில் முன்னணி வணிகராக உயர்ந்தார். கிடைத்த லாபத்தில் நகர் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.

தக்க சமயத்தில் தனது மகன் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்தார். அன்சாரிக்கும் அல்லாஹ்வின் கருணையால் நான்கு ஆண் மக்களும், இரண்டு பெண்களும் பிறந்தனர்.

தொழில்துறையை கவனிக்க ஆட்கள் தேவை இருந்ததால் தனது பேரக்குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அவர்களையும் தொழில்துறையில் இணைத்துக் கொண்டார்.

இப்படி சீராகத்தான் அஹமதுடைய வாழ்க்கை போனது. காலத்தின் கட்டாயம் இறைவனின் நாட்டப்படி அஹ்மத் இறைவனடி சேர்ந்தார்.அப்பொழுதுதான் வியாபாரத்தில் பிரச்சனைகள் உறுவானது. அவரது மகன் அன்சாரியின் படிப்பறிவின்மை காரணமாக நிர்வாகத்திறமை இலலாமலும், தனது பிள்ளைகளின் ஆடம்பரபோக்கினை கண்டிக்க முடியாமலும் தேவையற்ற கடன் வாங்கி குவித்தார்.

திடீரென அன்சாரியும் வஃபாத்தானார். பிள்ளைகளோ கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் தடுமாறினர்.போதிய அனுபவமின்மை, படிப்பறிவின்மை காரணமாக நன்றாக சென்று கொண்டிருந்த வணிகத்தை சமாளிக்க இயலவில்லை.

இதனால் வணிக நிறுவனத்தை கடன் வழங்கிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாய சூழல். இறுதியில் தங்களது குடும்பம் அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் சூழல்களை உறுவாக்கி விட்டது.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், அனைவரும் வியக்கும் படி கஷ்டப்பட்டு முன்னேறிய வணிக குடும்பம் இன்று தள்ளாடும் சூழ்நிலையில்.

நாம் கற்க வேண்டிய பாடம்: குழந்தைகளுக்கு அவர்களது இளமைக் காலத்தில் கல்வியினை வழங்கியிருப்பின் இன்று அதனைக் கொண்டு அவர்கள் குடும்பத்தினை சிறப்பாக நடத்த ஏதுவாய் இருந்திருக்கும் எனவே எத்தகைய சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு கல்வினை வழங்க பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது.

(இது ஒரு உண்மைச் சம்பவம். பெயர் மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ன)


- காஹிலா

No comments: